பெண்களே எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் - வேண்டுகோள் விடுக்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

பெண்களே எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் - வேண்டுகோள் விடுக்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும், தங்கச் சங்கிலி கொள்ளைகள் அதிகரித்து வருவதனால் பெண்கள் அனைவரும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தங்கச் சங்கிலி கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் நேற்று மாத்திரம் நான்கு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன்போது ஹபராதுவ, அக்மீமன மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்துள்ள இனந்தெரியாத நபர்களிருவர், 67 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அக்மீமன மற்றும் கிளிநொச்சி பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களாலே இவ்வாறு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பொரலஸ்கமுவ பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஹத்துட்டுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபரான இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, பிளியந்தல, கஹாத்துட்டுவ மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும், ஏழு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவலகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது கொள்ளையிட்டதாக கருதப்படும் 4 தங்கச் சங்கிலிகளும், தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேற்படி கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment