தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் - அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் - அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெறுக்கத்தக்கது. தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்து அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமம் 35 வருட காலத்திற்கு இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் விற்பனை செய்யவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ அல்லது முதலீட்டுக்காக வழங்கவோ அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானம் தவறானதாகும்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன 2020.10.22 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்தார். 

2019.05.28 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடனும், ஜப்பானுடனும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரானது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து 2020.12.22 ஆம் திகதி துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சரிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும், 2021.01.13 ஆம் திகதி உங்களுடன் (ஜனாதிபதி) இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் அரசாங்கம் இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமத்தை வழங்க உறுதியாகவுள்ளது என்பதை தெரிந்து கொண்டோம்.

கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையினால் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து 23 துறைமுக சேவை சங்கத்தினர் ஒன்றினைந்து கடந்த மாதம் 29 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்தோம். துறைமுக ஊழியர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள்.

போராட்டத்தின் காரணமாக அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகளை துறைமுக அதிகார சபை முழுமையாக முன்னெடுக்கட்டும் என்ற தீர்மானத்தை எடுத்தது. இத்தீர்மானம் அமைச்சரவை மட்டத்தில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொழிற்சங்கத்தினரது போராட்டம் கடந்த 2 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்திய ஊடகத்துக்கு கடந்த 14 ஆம் திகதி குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் கிடையாது. 42 வருட கால பின்னணியை கொண்டுள்ள துறைமுக சேவையில் பல உரிமங்கள் அந்நியர் நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பல விடயங்களை சாதிக்க முடிந்தாலும் தேசிய மட்டத்தில் அதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கிழக்கு முனையத்தை தேசிய பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை கூட அரசாங்கம் தாமதாமாகியே ஏற்றுக் கொண்டது.

மேற்கு முனையத்தின் 95 சதவீத உரிமத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெயர் குறிப்பிடும் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெறுக்கத்தக்கது. இத்தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். மேற்கு முனையத்தை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்துதல் அவசியமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad