வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்க கூண்டில் இருப்பதைப் போன்றது - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்

வெள்ளை மாளிகை வாழ்க்கை என்பது தங்க கூண்டில் இருப்பது போன்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20ஆம் திகதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவி ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு இதுவே அவர்களது இல்லமாகும்‌.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது 4 வாரங்களாக வெள்ளை மாளிகையில் இருக்கும் தனது அனுபவம் குறித்து ஜோ பைடன் பேசினார்‌. அப்போது அவர் வெள்ளை மாளிகை வாழ்க்கை என்பது தங்க கூண்டில் இருப்பது போன்றது என கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில் ‘‘நான் காலையில் எழுந்ததும் எனது மனைவி ஜில் பைடனை பார்த்து நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்பேன்’’ என நகைச்சுவையாக கூறினார்.‌ 

மேலும் அவர் தனக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கும் வெள்ளை மாளிகை பணியாளர்களுடன்தான் இன்னும் பழகவில்லை என்றும், பெரும்பாலும் தனது வேலைகளை தானே கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில் ‘‘நான் துணை ஜனாதிபதியாக இருந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட முறை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்துக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் ஒருபோதும் ஜனாதிபதியின் குடியிருப்பு பகுதிக்கு சென்றதில்லை. 

4 வாரங்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியை புதிதாகவே உணர்கிறேன். 80 ஏக்கரில் அமைக்கப்பட்ட துணை ஜனாதிபதி இல்லத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது’’ என்றார்.

மேலும் வெள்ளை மாளிகை வாழ்க்கையின் அனுபவம் குறித்து அறிய முன்னாள் ஜனாதிபதிகள் சிலருடன் தொலைபேசியில் பேசியதாகவும் ஜோ பைடன் கூறினார். எனினும் யார் யாருடன் பேசினார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad