இலங்கை அரசாங்கம் பின்வாங்குவது முஸ்லிம்களின் மத உரிமைகளை கொடூரமாக மறுத்த கொள்கையின் முடிவு - மனித உரிமைகள் கண்காணிப்பகம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

இலங்கை அரசாங்கம் பின்வாங்குவது முஸ்லிம்களின் மத உரிமைகளை கொடூரமாக மறுத்த கொள்கையின் முடிவு - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உறுதிமொழி வழங்கிய போதிலும், அரசாங்கம் கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்து வருகிறது.

அத்துடன் நிபுணர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்தே முடிவை அறிவிக்க முடியும் எனக்கூறி அரசாங்கம் தற்போது பின்வாங்குகிறது. இது முஸ்லிம்களின் மத உரிமைகளை கொடூரமாக மறுத்த கொள்கையின் முடிவாக அமைந்தது.

மேலும் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள போதும் இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை வல்லுனர்களும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கண்டித்துள்ளன.

பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜெனீவா அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினரான பாகிஸ்தானின் ஆதரவைப் பெற இலங்கை ஆர்வமாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய தீர்மானத்தை பேரவை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் எனவும் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad