பதில் சுகாதார அமைச்சரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன? - இக்காலப்பகுதியில் முக்கிய தீர்மானங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டது அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : சந்தித் சமரசிங்க - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

பதில் சுகாதார அமைச்சரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன? - இக்காலப்பகுதியில் முக்கிய தீர்மானங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டது அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : சந்தித் சமரசிங்க

(நா.தனுஜா)

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் கழித்தே பதில் சுகாதார அமைச்சரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாமதத்திற்கான காரணம் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் இல்லாத காலப்பகுதியில் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வது உள்ளடங்கலாக சுகாதாரத்துறைசார் முக்கிய தீர்மானங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப்பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், பதில் சுகாதார அமைச்சரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என்னவென்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி உறுதிசெய்யப்பட்டதுடன், அவர் 28 ஆம் திகதி தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சுகாதார அமைச்சரினால் ஏனைய பொறுப்புக்களைக் கண்காணிக்க முடியாத நிலையேற்பட்டது. எனினும் அரசாங்கம் பதில் சுகாதார அமைச்சரொருவரை நியமிப்பதை 19 நாட்கள் தாமதப்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினமே பதில் சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாட்டில் 19 நாட்களுக்கு சுகாதார அமைச்சரொருவர் இல்லாமலிருந்த காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 98 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை காலமும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இக்காலப்பகுதியில் மரணித்திருக்கிறார்கள். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையிலும்கூட, இந்த நிலைவரத்தைக் கையாளுவதற்கு பதில் சுகாதார அமைச்சரொருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது.

சுகாதாரத்துறை சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஒருவர் இல்லாமலிருந்த காலப்பகுதியில், அந்தத் தீர்மானங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். 

அது மாத்திரமன்றி இக்காலப்பகுதியில் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. சுகாதார அமைச்சர் இல்லாத நிலையில், இம்முக்கிய பணிகள் யாரால் முன்னெடுக்கப்பட்டன? இவை குறித்தும் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad