எம்.பி. என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட, மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதாக கருதுகின்றேன் - வேலு குமார் - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

எம்.பி. என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட, மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதாக கருதுகின்றேன் - வேலு குமார்

"பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது சேவைகளில் உள்ள சிற்றூழியர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட, எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன்." என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

தற்பொழுது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோவிட் தடுப்பூசியை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றது. தங்களது வயதெல்லை மற்றும் உடல் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு பல உறுப்பினர்கள் இவ்வசதியை பயன்படுத்தியுள்ளனர். இதில் எவ்வித தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அதேபோல சிலர் தவிர்த்துக் கொண்டும் உள்ளனர். 

எங்களை பொறுத்தவரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும், பொது பணியில் உள்ள சிற்றூழியர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன்.

தற்போது கோவிட் தடுப்பூசி வழங்களில் சிக்கலான நிலைமை தோன்றி இருக்கின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலும் முன்மொழியப்பட்ட தடுப்பூசி வழங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் கைவிடப்பட்டு இருக்கின்றது. எவ்வித திட்டமிடலும் இன்றி ஒழுங்கற்ற வகையிலே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருவர் தடுப்பூசியை பெறுவதற்கான அடிப்படை என்ன?, அதனை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை என்ன?, அதுதெடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக எவ்வித முறையான தெளிவுபடுத்தலும் இல்லாதிருக்கின்றது. தற்போது தடுப்பூசி வழங்கல் எவ்வாறான அடிப்படையில் இடம்பெறுகின்றதென்பது குழப்பமான ஒன்றாக உள்ளது.

மக்களுக்கான பொது பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதே போல அப்பொதுப்பணிகளில் உள்ள உயர் மட்டத்தவர் மட்டுமன்றி சிற்றூழியர்கள் வரை அவ்வசதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சிற்றூழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்கள் சன நெருக்கடி மிக்க இடங்களிலேயே குடியிருக்கிறார்கள். கோவிட் தாக்கமும் அங்கே பாரிய அளவில் உள்ளது. விசேடமாக கண்டி மாநகர எல்லையில் உள்ள மஹியாவை, நித்தவளை கிராமங்கள், அதே போன்று கம்பளை மற்றும் நாவலபிட்டிய நகர எல்லையில் உள்ள குடமாக்க மற்றும் சோய்ச்சியாகல போன்ற பிரதேசங்களை குறிப்பிடலாம்.

பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களும் லயன் அறைகளில் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான சுகாதார வசதிகளும் மிக கீழ்மட்டத்திலேயே உள்ளது. அத்தொடு அவர்கள் தொடர்ச்சியாக தொழிலிலே ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். இக்காரணிகளை கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களோடு சேர்ந்து நாமும் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment