அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்துங்கள் - அமெரிக்காவை வலியுறுத்தியுள்ள சீனா - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்துங்கள் - அமெரிக்காவை வலியுறுத்தியுள்ள சீனா

சீன அரசியலமைப்பை கறை படுத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.‌

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்தது.

வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் தீரா பகையை உருவாக்கியது.

இந்த சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். இவரது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா சீனா இடையிலான உறவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் கடந்த 11ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் ஜோ பைடன் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜோ பைடன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் சீனாவில் மனித உரிமை மீறல்களுக்கு விளைவுகள் இருக்கும் எனக்கூறி சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா சீனா உறவுகளில் கவனம் செலுத்துவது தொடர்பான சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது.

இதில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கலந்து கொண்டு உரையாற்றினார்.‌ 

அப்போது அவர் பேசியதாவது முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சீனாவை நோக்கி முன்வைத்த கடுமையான கொள்கைகளை ஜோ பைடன் நிர்வாகம் சரி செய்ய வேண்டும். அமெரிக்காவை சவால் செய்யவோ அல்லது மாற்றவோ எங்களுக்கு விருப்பமில்லை. அமைதியான சகவாழ்வு மற்றும் அமெரிக்காவுடன் பொதுவான வளர்ச்சியை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

அதேபோல் அமெரிக்காவும் சீனாவின் முக்கிய நலன்கள் தேசிய கௌரவம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை மதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசியலமைப்பை கறை படுத்துவது, தாய்வானின் பிரிவினைவாத சக்திகளின் தவறான சொற்களையும் செயல்களையும் ஆதரிப்பது, ஹொங்கொங், திபெத் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சீனாவின் பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களை நீக்குவது, சீனாவின் வர்த்தக நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை நீக்குவது, சீனாவை பகுத்தறிவற்ற முறையில் அடக்குவதை கைவிடுவது ஆகியவற்றுடன் அமெரிக்கத் தரப்பு தனது கொள்கைகளை சீக்கிரம் சரி செய்யும் என்று நம்புகிறோம் இவ்வாறு அவர்பேசினார்.‌

No comments:

Post a Comment

Post Bottom Ad