அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றி விட்டது - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றி விட்டது - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா

(எம்.மனோசித்ரா)

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறி அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் ஒரு விடயத்தையும், உள்நாட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் மற்றொரு விடயத்தையும் கூறுவதன் மூலம் இவ்விரு தரப்பினரையுமே ஏமாற்ற முடியும் என எண்ணுகின்றனர். அவ்வாறு யாரும் ஏமாற மாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கே பாதகமானதாக அமையும் என்றும் ஹர்ஷண ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இது தொடர்பில் நாம் சபாநாயகரிடமும் விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளோம். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியவர்களைப் போலவே, இதன் பின்னணியில் உள்ளவர்களும் திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 69 இலட்சம் மக்களை ஏமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமைந்துள்ளது. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியமை கொரோனா சடலங்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது. 

சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விடயத்தையும் சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இன்னொரு விடயத்தையும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad