நல்லாட்சி ஒப்பந்தத்தை எமது அரசாங்கத்தால் கிழித்தெறிய முடியாது, தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என்கிறார் ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

நல்லாட்சி ஒப்பந்தத்தை எமது அரசாங்கத்தால் கிழித்தெறிய முடியாது, தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை என்கிறார் ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் செய்து கொண்ட கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கிழித்தெறிய முடியாது எனவும், அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய உடன்படிக்கை குறித்த தற்போதைய நிலைப்பாடு என்ன, இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என ஹேஷா விதானகே எம்.பி கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட கொழுப்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கிழித்தெறிய முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலையொன்று காணப்படுகின்றது.

இது குறித்த அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன்போது இந்தியா பெயர் குறிப்பிட்டுள்ள குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வொன்றை எட்டும் குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் துறைமுக அபிவிருத்தியில் முதலீட்டாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு அதிக சாதகமான வகையிலேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். ஆனால் நாம் முன்வைத்த யோசனைகளுக்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.

அதனால்தான் கிழக்கு முனையத்திற்கு முதலீட்டாளர்களை கொண்டு வரும் திட்டத்தில் இருந்து நாம் விலகிக் கொண்டோம். எவ்வாறு இருப்பினும் கிழக்கு முனையத்தை நூறுவீத நிருவாகமும் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவே நாம் முயற்சிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment