சீன ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து உரையாடினார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

சீன ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து உரையாடினார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங்கை தொலைபேசியில் அழைத்து பேசினார்.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை, தொழில்நுட்பங்களை திருடுவதுடன், நியாயமற்ற பொருளாதார நடைமுறைகளில் ஈடுபடுவதாக சீனா மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். 

இந்த விவகாரத்தில் இரு தரப்பு மோதல்கள் வலுத்து, வர்த்தகப்போர் தொடங்கியது. சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை விதிக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய தகவல்களை சீனா ஆரம்பத்தில் மறைத்து விட்டது, அதனால் அமெரிக்கா பெரும்பாதிப்புக்குள்ளானது என்று டிரம்ப் கருதினார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மோசம் அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். இது அமெரிக்க - சீன உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்த தருணத்தில், ஜோ பைடன், அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜின்பிங்கை நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார். 

சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜின் பிங்குக்கும், சீன மக்களுக்கும் ஜோ பைடன் முதலில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் சீனாவின் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது சீனா கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தனது கவலையை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவது, உலகளாவிய சுகாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள சவால்கள், பருவநிலை மாற்றம், ஆயுத பெருக்கத்தை தடுத்தல் உள்ளிட்டவை பற்றியும் ஜோ பைடனும், ஜின்பிங்கும் விவாதித்து உள்ளனர்.

மோசமான உறவால் இரு தரப்புக்கும் பேரழிவு ஏற்படும் என்று ஜோ பைடனிடம் ஜின்பிங் எச்சரித்தார் என்று சீன அரசு டெலிவிஷன் கூறியது. 

இரு தரப்பு உறவுகள், முக்கிய சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஜின்பிங்கும், ஜோ பைடனும் விவாதித்தனர் என்று சீன டெலிவிஷன் தெரிவித்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜோ பைடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், அமெரிக்க மக்களுக்கு பலன் அளிக்கும்போது சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சீன ஜனாதிபதி ஜின்பிங்கிடம் தெரிவித்தேன் என கூறி உள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை இவ்விரு தலைவர்கள் சந்திப்பு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில், “சீனாவின் கட்டாயமான, நியாயம் இல்லாத பொருளாதார நடைமுறைகள், ஹொங்கொங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறல் போன்றவற்றை ஜனாதிபதி ஜோ பைடன், ஜின்பிங்கிடம் வலியுறுத்தி பேசினார்” என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment