பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள், முறைகேடுகளை விசாரணை செய்ய பாராளுமன்ற குழு அமைக்க தீர்மானம் - அமைச்சர் சுதர்ஷினி - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள், முறைகேடுகளை விசாரணை செய்ய பாராளுமன்ற குழு அமைக்க தீர்மானம் - அமைச்சர் சுதர்ஷினி

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

சபாநாயகரின் அனுமதியுடன் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி இந்த பாராளுமன்ற குழுவை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு வன்முறைகள், பாகுபாடுகள் மற்றும் ஏதாவதொரு பதவியில் தமது திறமை, தகுதி மற்றும் இயலுமைக்கு அமைய பதவி உயர்வு பெறும் போது பெண் என்ற காரணத்தினால் இடம்பெறும் முறைகேடுகளை விசாரணை செய்யக்கூடிய முழு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற குழு அவசியமாகும்.

பெண்களுக்கு உரிய இடம், சமநிலை, தாய்க்கு முதலிடம் போன்ற வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும், சமூகத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு பாகுபாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த பாராளுமன்ற குழுவின் ஊடாக பெண்களின் திறமை, இயலுமை மற்றும் தகுதி அடிப்படையில் முன்னேறிச் செல்ல உள்ள தடைகளை தவிர்க்க முடியும் என்றார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜேரத்ன, கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad