சீனி வரி வருமானத்தைக் கொண்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்து சகல மக்களும் வழங்க முடியும் - உமா சந்திரா பிரகாஷ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

சீனி வரி வருமானத்தைக் கொண்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்து சகல மக்களும் வழங்க முடியும் - உமா சந்திரா பிரகாஷ்

(எம்.மனோசித்ரா)

சீனி இறக்குமதிக்கான வரி நீக்கத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்து நாட்டிலுள்ள சகல மக்களும் வழங்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், வாழ்க்கை செலவு பாரதூரமாக அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கிலும் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. நாட்டில் மத சுதந்திரம் காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. இலங்கை பூகோள ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதற்காக தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு தாரை வார்க்க இடமளிக்க முடியாது.

கொவிட் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்து அனைத்து மக்களுக்கும் வழங்க முடியாதா? இதற்கான பலம் அரசாங்கத்திற்கு இல்லை. மேல் மாகாணம் அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும் இங்கு துறைமுகம் உள்ளிட்டவற்றில் தொழில் புரிவபர்களுக்கு முதலில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போது அதனை விட பாரிய மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமே கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள போதுமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad