தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இனவாத, மதவாத குற்றச்சாட்டுக்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - வறுமை, தொழிலின்மை, பிரச்சினை வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டடதல்ல : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இனவாத, மதவாத குற்றச்சாட்டுக்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் - வறுமை, தொழிலின்மை, பிரச்சினை வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டடதல்ல : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு எதிராக இனவாதம் மற்றும் மதவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். பிற இனத்தவர்களின் உரிமைகளை முடக்குவது தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் நோக்கமல்ல என தேசிய மரபுரிமைகள், கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் அமைச்சில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அரசியல்வாதிகள் இனவாதம் மற்றும் மதவாதம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.

நாட்டின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முழு நாட்டிலும் தொல்பொருள் மரபுரிமைகள் காணப்படுகின்றதாக சான்றாதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அனைத்து இன மக்களின் மரபுரிமைகளும் அனைத்து பகுதிகளிலும் மறைந்துள்ளன. அவற்றை பாதுகாப்பதே தேசிய மரபுரிமைகள் அமைச்சின் நோக்கமாகும்.

ஆகவே அரசியல் நோக்கங்களை கொண்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு இனத்தின் மதம் மற்றும் கலை கலாச்சார மரபுரிமைகளை முடக்குவது தொல்பொருள் அகழ்வராய்ச்சியின் நோக்கமல்ல.

அரசியல்வாதிகளே தேவையில்லாத பிரச்சினையை தோற்றுவித்துள்ளார்கள். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றிற்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகளை இடைநிறுத்த போவதில்லை.

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்கள். அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாகவும் வெற்றி கொள்ள முடியும்.

வறுமை, தொழிலின்மை, உள்ளிட்ட பிரச்சினைகள் நாட்டில் அனைத்து மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. இப்பிரச்சினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டடதல்ல. வடக்கு மக்களுக்கு மாத்திரம் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது.

இப்பிரதேச மக்கள் நாளாந்த வாழ்க்கையில் எதிர்ககொள்ளும் பிரச்சினைகளை போன்றே பிற மாகாண மக்களும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அனைத்து இன மக்களும் பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைந்தால் தேவையற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறாது. மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment