ஆயிரம் ரூபாவுக்கு ஆட்சேபனை தெரிவிப்போரை விமர்சிக்க திராணியற்றவர்களே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கின்றனர் - செந்தில் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

ஆயிரம் ரூபாவுக்கு ஆட்சேபனை தெரிவிப்போரை விமர்சிக்க திராணியற்றவர்களே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கின்றனர் - செந்தில் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அன்று முன்னெடுத்த முயற்சி, இன்று அவர் வழியில் காங்கிரஸ் சாதித்துக் காட்டியுள்ளதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான தீர்மானம், சம்பள நிர்ணய சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் கைகளில் அந்தச் சம்பளம் போய்ச் சேரும் வரையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சி தொடரும்.

காங்கிரஸின் இந்த முயற்சியையும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில், எதிர்க்கட்சியினராலும் சில பொது அமைப்புகளினாலும், சமூக வலைத்தள விமர்சகர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் செயற்பாடுகளும், காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் பலத்தை, மக்கள் மத்தியிலிருந்து வலுவிழக்கச் செய்யப்பட்டவையே என்பது, இன்று புலனாகியுள்ளது.

ஆயிரம் ரூபா நாள் சம்பளத்துக்கு ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்குமாறு, சம்பள நிர்ணயச் சபை அறிவித்திருக்கின்ற நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள், சிறு தோட்ட உரிமையாளர்கள், சிவில் அமைப்புகள் எனப் பல தரப்பட்டவர்களால், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆயிரம் ரூபாயை வழங்க முடியாதென்று இவ்வாறு ஆட்சேபனை தெரிவித்தவர்களுக்கு எதிராக, மேற்படி எதிரணியினரும் சரி, ஒரு சில பொது அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகரிகளும் சரி, எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமையானது, அவர்களின் அரசியல் சுயலாபத்தையும் மக்கள் மத்தியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிரான தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணப்பாட்டையுமே, இன்று வெளிப்படுத்தியுள்ளது.

இன்று ஆட்சேபனை தெரிவித்துள்ளவர்களைத்தான், இத்தனை காலமும், ஒரு தனி மனிதனாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்கொண்டு வந்துள்ளார்.

அவர் வழியிலேயே, காங்கிரஸ் இன்றும் அவர்களை எதிர்கொண்டு வருகின்றது. அதில் இன்று வெற்றியும் கண்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களின் கரங்களை அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் போய்ச் சேரும் வரையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சி தொடரும்.

ஆனால், ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொடுக்க முடியாதென்று ஆட்சேபனைகளை முன்வைத்து வரும் பெருந்தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட தரப்பினரை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகவே, மேற்படி சுயலாப அரசியல்வாதிகளும் போலி விமர்சகர்களும் காணப்படுகின்றனர். 

அதனால்தான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிரான விமர்சனங்களை மாத்திரமே, கடந்த காலந்தொட்டு இன்றுவரை முன்வைத்து வருகின்றனர். இதைத்தான் இவர்கள், முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர் என்பது, ஆயிரம் ரூபாய்க்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காததிலிருந்தே தெரிகிறது.

சம்பள நிர்ணயச் சபையின் பேச்சுவார்த்தையில், 8 பெருந்தோட்டக் கம்பனிகள் கலந்துகொண்டு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதில் ஒரு வகையில் நியாயமிருப்பினும், நூற்றுக்கணக்கானோர் அந்தச் சம்பள அதிகரிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள் என்றால், இதற்குப் பின்னால் பாரிய சக்தியொன்று தொழிற்பட்டு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியை முறியடித்து வந்திருக்கின்றமையும் வெளிப்படையாகியுள்ளது.

எவ்வாறாயினும், அந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப்  பெற்றுக் கொடுக்கும் முயற்சியில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றி காணும் என்பது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad