கூட்டமைப்பினர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு மக்களைக் குழப்புகின்றனர் : கருணா அம்மான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு மக்களைக் குழப்புகின்றனர் : கருணா அம்மான்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களைக் குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பிரதமரின் மட்டு-அம்பாரை விசேட இணைப்புச் செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று (22) அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இரவு கல்முனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. உண்மையில், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இருக்கின்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

ஏனென்றால், பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, இரண்டாம் கட்டம் வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஜனாதிபதியிடம் இருக்கின்றது. இதை நான் அரசாங்கத்துடன் நெருக்கமானவன் என்ற வகையில் தொடர்ந்து இப்பணிகளை எமது மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்பதை நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு மக்களைக் குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில், இவ்விடயத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு சரிவடைந்து வருகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

அதைக்கட்டியெழுப்புவதற்காக வெறும் கோஷங்களைத் தூண்டி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி, மாற்றங்களை உருவாக்கலாம் என கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். அது நிறைவேறப் போவதில்லை.

ஏனெனில் மக்களுக்குத் தேவையான விடயங்கள் என்னவென்று மக்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இன்று மக்கள் எங்களுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இதனடிப்படையில் தான் எனக்கு அம்பாறை மாவட்ட மக்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளார்கள். இதேபோன்றுதான் ஏனைய பிரதேசங்களிலும் கூட்டமைப்பினருக்கு சரிவு ஏற்பட்டிருந்தது.

ஆகவே, இதை நிவர்த்தி செய்வதற்காக வெறுமையான திட்டங்களையும் வெற்றுக் கோஷங்களையும் மக்கள் மத்தியில் உருவாக்கி, துண்டுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள். இவர்களது செயற்பாடுகளை மக்கள் கண்டு கொண்டதாக நான் அறியவில்லை.

அத்துடன், குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களை பாராட்டியே ஆக வேண்டும். எமது பிராந்திய வைத்திய அதிகாரி சுகுணன் மிகவும் திறன்பட சேவைகளை வழங்கி வருகின்றார். அவருக்கு மக்கள் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்கள். பல மாதங்களாக சில பிரதேசங்கள் முடக்கப்பட்ட போதிலும், மக்கள் எவ்வித கொந்தளிப்புமில்லாமல் கொரோனா அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஒத்துழைத்திருந்தனர்.

அதனால் கொரோனாவின் பரவல் மிகவும் குறைவடைந்து வரும் நிலையிலிருக்கின்றது. மக்கள் மத்தியில் குறித்த வைரஸ் தொடர்பில் அச்சமில்லை. ஏனெனில், மக்கள் அதிலிருந்து சுயமாக தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதனால், அதிலிருந்து மக்கள் மீள எழுவதற்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad