வெளிநாட்டு கட்சிகளுக்கு எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ, தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாது - தேர்தல்கள் ஆணைக்குழு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

வெளிநாட்டு கட்சிகளுக்கு எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ, தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாது - தேர்தல்கள் ஆணைக்குழு

(எம்.ஆர்.எம்.வசீம்)

வேறு நாடு ஒன்றின் கட்சி ஒன்றுக்கு எமது நாட்டில் பதிவு செய்வதற்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கோ முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புங்ஷி ஹேவா தெரிவித்தார்.

இலங்கைக்குள் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாட்டு கட்சி ஒன்று இலங்கைக்குள் கிளைகளை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறான கட்சி ஒன்றை பதிவு செய்யவும் முடியாது. 

அது எமது நாட்டு கட்சி ஒன்றாக இருந்தால் இலங்கை பிரஜைகளால் கட்சி ஒன்றை அமைத்து, கடந்த 4 வருடங்களாக கட்சியாக செயற்பட்டு, தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் பின்னணி இருக்குமாக இருந்தால்தான், அந்த கட்சியை பதிவுசெய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியாக போட்டியிட முடியுமாகின்றது.

அவ்வாறு இல்லாமல் எந்தளவு பிரபலமான கட்சியாக இருந்தாலும் நாட்டுக்குள் கிளைகளை அமைத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது. அத்துடன் அவ்வாறான கட்சிகள் இலங்கையில் கட்சியொன்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் சட்டத்தின் பிரகாரம் முடியாது.

எமது சட்டத்தின் பிரகாரம் நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad