யாழ். பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும், அதுவும் பொருத்தமான இடத்தில் அமையப் பெறுவது அவசியம் என்கிறார் கலாநிதி எஸ்.ஏ. சூசை ஆனந்தன் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

யாழ். பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும், அதுவும் பொருத்தமான இடத்தில் அமையப் பெறுவது அவசியம் என்கிறார் கலாநிதி எஸ்.ஏ. சூசை ஆனந்தன்

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பபாணம் பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் அவ்வாறு அமைவதன் மூலம்தான் கடல் வளப் பொருளாதாரம் செழிப்புறும் என கலாநிதி எஸ்.ஏ. சூசை ஆனந்தன் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறு மீனவர்கள் தொழில் செய்வதற்காகன கொள்கை உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் முறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் பல்கலைக்கழக துறைசார்ந்தோர் கலந்து கொண்டு கருத்துருவாக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் மீன்பிடியியல் கற்கைகள் பீடம் ஆரம்பிக்கப்படும் என அண்மையில் அந்த வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. பல வருடங்களாக பேசு பொருளாக உள்ள கடற்தொழில் கற்கைகள் பீட விவகாரம் தற்போது வெளியில் வந்துள்ளது.

அமரர் பேராசிரியர் துரைராஜா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் கற்கைகள் பீடத்தை ஆரம்பிக்க வேண்டும் என முழுவீச்சில் செயற்பட்டார். ஆயினும் அன்றைய காலப்பதியில் இருந்த அசாதாரண அரசியல் சூழல் காரணமாக அந்த முயற்சி தடைப்பட்டுப் போயிற்று.

எவ்வாறாயினும் போர் நிறைவுக்கு வந்து சில வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இருந்த அமரர், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் கடற்தொழில் கற்கைகள் பீடம் அமைக்கும் விவகாரம் மீண்டும் அரங்கிற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு என ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு இது விடயமாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக கடற்தொழில் கற்கைகள் பீடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் பொருத்தமான ஓர் இடம் தெரிவு செய்யப்பட்டதுடன், கடற்தொழில் ஆய்வு மையம் ஒன்று இப்பீடத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

துரதிஷ்டவசமாக பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் 2018ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் கடற்தொழில் பீட விவகாரம் மீண்டும் மறைந்து உறைநிலைக்குப் போனது.

இவ்வாறான நிலையில் கடற்தொழில் அமைச்சர், அறிவியல் நகரில் கடற்தொழில் கற்கைகள் பீடம் மிக விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அவ்வாறாயின் கடற்தொழில் கற்கைகள் பீடம் அமைக்க மிகப் பொருத்தமான இடமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவில் அமையவிருந்த கடற்தொழில் கற்கைகள் பீடம் என்னவாயிற்று? அதனோடு இணைந்து மன்னாரில் அமையவிருந்த ஆய்வு மையம் என்னவாயிற்று?

வடக்கு மாகாணத்தில் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்குவது மீன்பிடித்துறையே. 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இது விளங்குகின்றது.

மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளதுடன் பல உள்ளூர் நீர் ஏரிகளையும் நீர் நிலைகளையும் கொண்டுள்ள இப் பிரதேசத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்தி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

அத்துடன், ஒருபுறம் இந்திய மீனவர்களாலும் மறுபுறம் தென்னிலங்கை மீனவர்களாலும் வளம் சூறையாடப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இந்த துறைசார் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் அபிவிருத்திக்கு கடற்தொழில் கற்கைகள் பீடம் பொருத்தமான இடத்தில் அமையப் பெறுவது அவசியம்.

மிக அத்தியாவசியமாக அமைய வேண்டிய கடற்தொழில் கற்கைகள் பீடம் இதுவரையில் வெறும் பேசுபொருளாகவே இருந்து வருவது நல்லதல்ல. தொடர்ந்தும் தீண்டப்படாத துறையாக இருந்து வருமா அல்லது மீண்டெழுந்து வருமா? கடற்றொழில் பீட கனவு நனவாகி பின்தங்கிய மாவட்டங்கள் விருத்தி பெற வேண்டும். எமது கடல் வளப் பொருளாதாரமும் செழிப்புற வேண்டும். இதுவே எமது அவா பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad