அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் - பொதுஜன பெரமுன - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் - பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியினர் தங்களின் கட்சி மட்டத்திலான யோசனைகளை தனித்து முன்வைத்துள்ளார்கள். அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு பொதுஜன பெரமுனவின் யோசனை அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவை பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான தேர்தல் கால வாக்குறுதிகளாக காணப்பட்டன. 

இதற்கமைய பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை ஸ்தாபித்ததுடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது பொதுஜன பெரமுனவின் பிரதான யோசனையாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார். 

புதிய அரசியமைப்பின் யோசனைகள் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவினால் நிபுணர் குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் யோசனைகளில் தேசிய கொடியில் மாற்றம், ஒற்றையாட்சி ஆட்சி முறைமை, பௌத்த மதம் அரச மதம் உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

பொதுஜன பெரமுனவின் கூட்டணியமைத்துள்ள கட்சியினர் தமது கட்சியின் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்கள்.

அனைத்து தரப்பினரது யோசனைகளும் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான யோசனை எதிர்வரும் வாரம் உத்தியோகப்பூர்வமாக குழுவினரிடம் முன்வைக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad