தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த ராணுவ விமானம் - 7 பேர் உடல் கருகி பலி - News View

Breaking

Post Top Ad

Monday, February 22, 2021

தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த ராணுவ விமானம் - 7 பேர் உடல் கருகி பலி

நைஜீரியாவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலிருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான 'கிங் ஏர் 350' ரக புறப்பட்டு சென்றது.

அபுஜாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னா நகரை நோக்கி 7 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டது.

கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் திடீரென செயலிழந்தது. இதனை அறிந்த விமானி விமானத்தை உடனடியாக மீண்டும் அபுஜாவில் உள்ள விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். 

இதுபற்றி அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமானத்தை திருப்பினார்.‌ ஆனால் விமான நிலையத்தை நெருங்கிய போது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால் விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டு மொத்த விமானமும் தீயில் கருகி உருக்குலைந்து போனது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad