ஐக்கிய அரபு இராச்சியத்தின் வரலாற்று சாதனை - 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது ‘ஹோப்’ விண்கலம் - நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று பாராட்டு தெரிவித்த ஆட்சியாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வரலாற்று சாதனை - 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது ‘ஹோப்’ விண்கலம் - நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று பாராட்டு தெரிவித்த ஆட்சியாளர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பயணத்திட்டத்தில் முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் முற்றிலும் உருவாக்கப்பட்ட ‘ஹோப்’ விண்கலம் ஒன்றை 2021ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது இதன் நோக்கமாகும். இந்த விண்கலமானது மனிதர்கள் இல்லாமல் அனுப்ப திட்டமிடப்பட்டது.

அதன்படி விண்கலத்தை உருவாக்கும் பணியானது துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விண்வெளி மையத்தின் சார்பில் நடைபெற்றது. 

இதற்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை மன்னரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

அந்த விண்கலத்தை 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இந்த ஆண்டில் அமீரகத்தின் 50 ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்து சென்ற மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும். பூமியில் இருந்து மிக அருகாமையில் வரும்போது செவ்வாய் கிரகமானது 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் விண்கலம் ஒன்று அதன் சுற்றுவட்டப் பாதையை அடைய வேண்டும் என்றால் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.

அதற்காக ‘ஹோப்’ விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த ‘ஹோப்’ விண்கலம் விண்வெளியில் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவில் மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.

பின்னர், செவ்வாய்க் கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோ மீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது. இதில் பூமியில் இருந்து செவ்வாய்க் கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 204 நாட்கள் எடுத்துக் கொண்டது. 

அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய பயணம் இந்த ஆண்டில் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடைந்தது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டனகஷிமா ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

அமீரகம் மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இறுதிக்கட்ட நிமிடங்கள் பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. நேற்றுமுன்தினம் இரவு அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டெல்டா 5 என்ற 6 திரஸ்டர் என்ஜின்கள் சுற்றுவட்டப் பாதையை நெருங்கும்போது இயக்கப்பட்டது.

இதனை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்பட்டது. இதில் அந்த விண்கலத்தில் உள்ள பாதி எரிபொருள் செலவிடப்பட்டது. மிகச்சரியாக 27 நிமிடங்கள் இயக்கப்பட்டது.

‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் நெருங்கியது. ஆனால் மிக நீண்ட தொலைவு காரணமானதால் அதனை உறுதிப்படுத்தும் சிக்னல் 12 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.42 மணிக்கு பூமிக்கு அனுப்பப்பட்டது.

இந்த சிக்னல்கள் ஸ்பெயின் நாட்டி மாட்ரிட் பகுதியில் உள்ள அண்டெனா மூலம் பெறப்பட்டது. முதல் சிக்னல் 7.50 மணியளவில் கிடைத்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் அடுத்த சிக்னல் 27 நிமிடங்கள் திரஸ்டர் என்ஜின்கள் இயங்கி முடித்ததும் கிடைத்தது. இதில் எந்த திரஸ்டர் என்ஜினும் பழுது இல்லாமல் இயங்கியது. 

சரியாக 8.20 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை ‘ஹோப்’ விண்கலம் அடைந்ததை திட்ட மேலாளர் ஒமரான் ஷரப் உறுதி செய்து அறிவித்தார். உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

தற்போது அந்த ‘ஹோப்’ விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் 1,062 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு, 25 டிகிரி கோணத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.

இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஒக்சிஜன், ஹைட்ரஹன் மூலக்கூறுகளின் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு உணரும் பகுதிகளுடன் கூடிய 3 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இருந்து அதிகபட்சமாக 49 ஆயிரத்து 380 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தும், குறைந்தபட்சமாக 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் தகவல்களை அளிக்க உள்ளது. இந்த ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றிவர 55 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

‘ஹோப்’ விண்கல பயணத்தினை அமீரக தலைவர்கள் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்திற்கு சென்று ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். 

அமீரக நேரப்படி இரவு சுமார் 8.20 மணியளவில் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்ததும் அமீரக தலைவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தனர்.

அமீரக துணை மன்னர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்குள் சென்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து அமீரகத்தின் ஏனைய பகுதிகளின் ஆட்சியாளர்கள், பட்டத்து இளவரசர்கள், அமீரக அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என பலரும் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இந்த மகத்தான வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் விண்வெளி ஏஜென்சிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் புர்ஜ் கலீபாவில் சிறப்பு வாணவேடிக்கை மற்றும் லேசர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment