மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்கள் - ஒருவர் சடலமாகவும் மற்றவர் உயிருடனும் மீட்பு, மேலும் ஒருவரை காணாவில்லை - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்கள் - ஒருவர் சடலமாகவும் மற்றவர் உயிருடனும் மீட்பு, மேலும் ஒருவரை காணாவில்லை

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது-31) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது-51), பாண்டியன் (வயது 23) ஆகிய மூவரும் ஒரு படகில் வழமை போன்று மன்னார் தென்கடல் பரப்பில் தூண்டில் மூலம் மீன் பிடிக்காக ஓலைத்தொடுவாய் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் அடுத்த தினம் கடலில் இருந்து தங்களின் படகில் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும் கடலில் நங்கூரம் இட்டும் அது பலன் கொடுக்காத நிலையில் தாங்கள் கடலில் படகுடன் செல்வதாக கரையிலிருந்த தங்கள் உறவினர்களுக்கு கையடக்க தொலைபேசியூடாக தகவல் வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர்களிடம் முறையீடு செய்ததைத் தொடர்ந்து இவர்களை மீட்பதற்கான உதவிகளை கடற்படையினரிடம் கோரி இருந்தனர்.

ஆனால் இவர்கள் காணாமல் போய் 15 தினங்கள் கடந்தும் இவர்களை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மாலைதீவு கடற்படையினரால் கண்ணன் என அழைக்கப்படும் ஏ.சிவதாஸ் (வயது-53) என்பவர் மீட்கப்பட்டார். எனினும் பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராசா ஜெயராம் (வயது-23) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிர் தப்பிய கண்ணன் என அழைக்கப்படும் ஏ.சிவதாஸ் (வயது-53) மற்றும் சடலமாக மீட்கப்பட்ட பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராசா ஜெயராம் (வயது-23) ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

எனினும் மன்னார் கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது-31) என்பவர் கடலில் காணாமல் போயுள்ளார். 

தற்போது உயிருடன் மீட்கப்பட்ட ஏ.சிவதாஸ் (வயது-53) என்பவர் மாலைதீவு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட சடலம் மாலைதீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன மன்னார் கொண்ணையான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்ரியான் கொட்வின் (வயது-31) தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்பில் மாலைதீவு தமிழ் நண்பர்கள் முகநூல் ஊடாக வெளியிட்டுள்ளனர்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad