கல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி - அவையை விட்டு வெளியேறினார் முதல்வர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

கல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி - அவையை விட்டு வெளியேறினார் முதல்வர்

கல்முனை மாநகர சபையின் 34 ஆவது அமர்வின்போது உறுப்பினர்களிடையே அமளி துமளி ஏற்பட்ட நிலையில், மாநகர முதல்வர் சபை அமர்வை இடைநிறுத்திவிட்டு சபை மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (27) புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு அமர்வின்போது புதிய 2021 ஆம் ஆண்டுக்கான நிலையியற் குழுக்களை நியமிப்பதில் முதல்வர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஆரம்பித்த வாய்த்தர்க்கம் எதிர்க்கட்சி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கைகலப்பாக மாறக்கூடிய நிலை உருவானது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா தனக்கு விரல் நீட்டி பேசினார் என்பதால் அவரை சபை அமர்விலிருந்து வெளியேற்றுவதோடு, தற்காலிகமாக சபை அமர்விலிருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்களும் கைகலப்பும் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து மாநகர சபை உறுப்பினர் கதிரமலை செல்வராசாவை வெளியேற்ற முற்பட்டவேளையிலேயே அங்கு கூச்சல் குழப்பம் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ராஜன்,  தோடம்பழ உறுப்பினர் எம்.அசீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் மனாப் ஆகியோர் உட்பட குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் கதிரமலை செல்வராசா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

(பாறுக் ஷிஹான், அஷ்ரப் கான், ஏ.எல்.எம். சினாஸ்)

No comments:

Post a Comment

Post Bottom Ad