கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்வு பஸில் ராஜபக்ஸவிடம் கேட்டதற்கிணங்க பிற்போடப்பட்டது : இனிய பாரதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்வு பஸில் ராஜபக்ஸவிடம் கேட்டதற்கிணங்க பிற்போடப்பட்டது : இனிய பாரதி

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்விற்கு தமிழ் தேசியவாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார்.

அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயமானது, கனிந்து வந்த பழத்தை தட்டி எறிந்தவர்கள் சிலர்.

இந்த விடயத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள், சில மாகாண சபை உறுப்பினர்கள்தான் பிரதேச தரமுயர்வினைத் தடுத்தவர்கள்.

தேர்தலுக்கு முன்னர் என்னால் அரச உயர்மட்டங்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை சாதகமாக பரிசீலனை செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கு முன்னர் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தமிழ் தேசியவாதிகள் சிலர் தங்களது அரசியலுக்காக பஸில் ராஜபக்ஸவினைச் சந்தித்து தேர்தலின் முன்னர் தரமுயர்த்த நடவடிக்கையெடுக்க வேண்டாமெனக் கூறியிருந்தனர். அவர்கள் கேட்டதற்கிணங்க இக்கோரிக்கை பிற்போடப்பட்டது. 

பின்னர் தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். அதன் பின்னர் என்னால் குறித்த கோரிக்கை உரிய தரப்பினரிடம் முன்வைக்கப்பட்ட போதிலும், அது பிரயோசனமற்றதாகி விட்டது. இது நான் தோற்றகடிக்கப்பட்டதனாலாகும். 

இன்று கருணா அம்மானுக்கு மக்கள் அளித்திருந்த வாக்குகளை அன்று எனக்களித்திருந்தால், இந்த கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு கனிந்த கனியாக ருசிக்கக் கூடியதாக இருந்திருக்கும் என்பது எனது வெளிப்படையான கருத்து என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad