இலங்கையிலுள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் வெடித்ததில் இந்தியர் ஒருவர் பலி, மேலும் இருவர் காயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

இலங்கையிலுள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் வெடித்ததில் இந்தியர் ஒருவர் பலி, மேலும் இருவர் காயம்

கொட்டதெனியாவவில் உள்ள கரபொட்டுவாவ பகுதியில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் இரும்பு உருக்கும் கொதிகலனொன்று வெடித்ததில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (03) அதிகாலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும், உயிரிழந்தவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயதான, ஜாவித் எனும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த தொழிற்சாலை, இந்திய நிறுவனமொன்றினால் நடாத்தப்படும் ஏராளமான இந்தியர்கள் பணி புரியும் தொழிற்சாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,000 பாகை செல்சியஸ் வரையான வெப்பத்தில் பொயிலரில் இரும்பு உருக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்போது அதில் உருக்கப்பட்டிருந்த இரும்பு சிதறியதில், எரிகாயங்களுக்குள்ளான மூவர் மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜாவிட் எனும் இந்தியர் மரணமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உருகிய இரும்புத் துண்டுகள் சிதறிக்கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணைக்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மரணித்தவரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரியின் வழிகாட்டலுக்கமைய, வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

கொட்டதெனியாவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad