சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை, பங்களாதேஷ் இணக்கம் - ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார் புதிய உயர் ஸ்தானிகர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை, பங்களாதேஷ் இணக்கம் - ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார் புதிய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசு உயர் ஸ்தானிகர் தாரிக் முகம்மத் ஆரிபுல் இஸ்லாம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகும் என்று கூறினார்.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகள் என்ற வகையில் சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

புதிய உயர் ஸ்தானிகர் தனது நாடு அதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என குறிப்பிட்டார். 

விவசாயம் மற்றும் ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை விரிவுபடுத்தக்கூடிய ஏனைய துறைகளாக ஜனாதிபதி அடையாளப்படுத்தினார். 

பல்கலைக்கழக மட்டத்தில் கல்வி ஒத்துழைப்பு முன்னுரிமைக்குரியது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர்கள் அதிகமானோர் ஏற்கனவே பங்களாதேஷில் உயர் கல்வியைப் பயின்று வருவதாக குறிப்பிட்ட புதிய உயர் ஸ்தானிகர், இலங்கைக்கான தனது நாட்டின் கல்வி வாய்ப்புகளை பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

2018 ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு இலங்கை அரச தலைவரும் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவில்லை என்பதாக குறிப்பிட்ட ஆரிபுல் இஸ்லாம், தனது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு முன்னர் விடுத்திருந்த அழைப்பை நினைவு கூர்ந்தார்.

அரச தலைவர்கள் மட்டத்திலான உறவுகளின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போதைய கடினமான காலம் முடிவடைந்ததும் அது பற்றி கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment