அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி, அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து வருகின்றனர்.

அவ்வாறான சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாட்டை இன்று வரை மேற்கொள்ளவில்லை என்பதுதான் எனது கருத்தாக உள்ளது.

அதேநேரத்தில் மிருசிவில் பகுதியில் பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரர் மற்றும் தற்போது ஆயுதங்களுடன் பிடிபட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பௌத்த மதகுருவை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்துள்ளார்.

அத்தகையதொரு சூழ்நிலையில் இன்று சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. அவர்களுடைய உயிர்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை இருக்கின்றது.

அவ்வாறான சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது தமிழர்கள் இலங்கையில் இல்லாமல் அல்லது தமிழர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் தமிழர்களுடைய எந்த விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடாது என்கின்ற மன நிலையினையே ஜனாதிபதி கொண்டுள்ளதாக தெரிகின்றது.

நாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தோம்.

அவ்விடயம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின்போது அவரை சந்தித்து, அவர் முன்னெடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாக கேட்க இருக்கின்றோம்.

உண்மையில் இன்றைய சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அவர்களின் குடும்பங்களை பொறுத்த வரையில் மிகவும் அவசியமான விடயமாக இருக்கின்றது.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி, அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவித்து, புனர்வாழ்வு அழிக்க வேண்டும் அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad