யாழில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் - மூவர் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

யாழில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் - மூவர் தப்பியோட்டம்

(எம்.நியூட்டன்)

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட விடத்தற்பளையில் நள்ளிரவு ஆராதனைக்கு சென்ற வீடு உடைத்து கொள்ளையிடும் முயற்சி அயலவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடிகாமம் விடத்தற்பளை பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டார் புது வருட ஆராதனைக்காக தேவாலயம் சென்றபோது அவர்களது வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த ஐவர் கொண்ட கொள்ளைக் கும்பல் வீட்டை உடைத்து கொள்ளையிட முற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் திடீரென ஆரவாரம் ஏற்பட்டதை அவதானித்த அயல் வீட்டார் சத்தமெழுப்பியவாறு வளவுக்குள் நுழைந்தபோது கொள்ளை கும்பல் ஓடி அருகில் உள்ள பற்றைக்குள் மறைந்துள்ளது.

இதையடுத்து அங்கு திரண்ட அயல் பகுதி இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் தப்பியோடிய கொள்ளைக் கும்பலை தேடும் முயற்சியில் தப்பியோடியவர்களது காலடித் தடங்களை பின் தொடர்ந்து அவர்கள் ஒழிந்திருந்த பற்றைப் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு வாள்களுடன் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் அருகில் வந்தால் வெட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலையும் பொருட்படுத்தாது அவர்களில் ஒருவரை இளைஞர் ஒருவர் துணிச்சலாக மடக்கிப் பிடித்துள்ளார்.

ஏனையவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு மேலும் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் மற்றைய மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரையும் பொறுப்பேற்றனர்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment