உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட மிகவும் சிறந்த தடுப்பூசியையே நாம் இந்தியாவிடமிருந்து பெறுகிறோம் - அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட மிகவும் சிறந்த தடுப்பூசியையே நாம் இந்தியாவிடமிருந்து பெறுகிறோம் - அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும் கட்டத்திலுள்ள மிகவும் பாதுகாப்பான தடுப்பூசியையே நாம் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். முதற்கட்டமாக சுகாதாரத் துறையுடன் நேரடியாக தொடர்புடையவர்களுக்கும் அடுத்தடுத்த கட்டத்தில் வெகு விரைவில் நாட்டு மக்களுக்கும் இதனை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இந்த வாரத்தில் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகள் 6 இலட்சம் வழங்கப்படும். தடுப்பூசிகள் கிடைத்ததன் அடுத்த நாள் முதல் அதனை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும். 

தடுப்பூசி வழங்கும் போது முகங்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் தொடர்பில் இனங்காண்பதற்காக ஒத்திகைகள் நடத்தப்பட்டன. தடுப்பூசி வழங்குவதன் மூலம் சுகாதார கட்டமைப்புக்கு காணப்படும் சுமை குறைவடையும். இதன் மூலம் மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தீவிரமாக வைரஸ் பரவுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். 

முதற்கட்டமாக முன்னிலையில் சுகாதார சேவையில் ஈடுபடுபவர்களுக்கும் அடுத்தடுத்து முப்படையினர், பொலிஸார் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படும். 3 இலட்சம் பேருக்கு முதலாவதாக தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களின் பின்னர் இரண்டாவது முறையும் ஏற்றப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 20 வீதமான தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கவுள்ளது. அதன் பின்னர் தேவையான தடுப்பூசிகளை பணம் கொடுத்து கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 2021 ஆம் ஆண்டில் கொவிட் தடுப்பில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முக்கிய இடத்தை வகிக்கும். மக்கள் அனைவரையும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோருகின்றோம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட மிகவும் சிறந்த தடுப்பூசிகளில் ஒன்றையே நாம் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். நாட்டுக்கு கொண்டு வரப்படும் எந்தவொரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதியைப் பெற வேண்டும்.

பைசர் பயோடெக் என்ற தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதோடு, ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும் கட்டத்திலுள்ளன. அரசாங்கம் என்ற ரீதியில் பாதுகாப்பான தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்தியாவிலிருந்து வழங்கப்படும் தடுப்பூசியை வழங்குவதே எமக்கு இலகுவானதாகும். அதனை களஞ்சிப்படுத்துவதற்கு உகந்த காலநிலை இலங்கையிலுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் சிறந்த பெறுபேற்றைக் கொண்ட நாடு இலங்கையாகும். தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய எஸ்.பி.சி. நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் மக்களுக்கு இவற்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment