வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளினால் கொரோனா பரவலடையாது, வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளினால் கொரோனா பரவலடையாது, வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

(இராஜதுரை ஹஷான்)

இங்கிலாந்து நாட்டு பிரஜைகளை தவிர ஏனைய நாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளினால் கொவிட்-19 வைரஸ் தாக்கம் பரவலடையாது. உக்ரைன் நாட்டுப் பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது. ஆகவே கொவிட் தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் வெற்றி கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட செயலக பிரிவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நகர அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இங்கிலாந்து நாட்டு பிரஜைகள் நாட்டுக்குள் வருவதற்கு மாத்திரமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளலாம்.

உக்ரைன் நாட்டவர் மாத்திரமல்ல ஏனைய நாட்டவர்களுக்கும் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணங்களை மேற்கொள்வதை தடுக்கும் தீர்மானத்தை சுகாதார தரப்பினரும், கொவிட்-19 வைரஸ் தொடர்பான தொழினுட்ப குழுவினரும் மாத்திரமே எடுப்பார்கள்.

இங்கிலாந்து நாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டுக்குள் வருவதற்கு மாத்திரம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் வணிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த புதிய சுகாதார திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச விமான சேவைகள் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் பரிந்துரைகளுக்கு அமையவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பிரயாணிகள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை சுற்றுலா சேவை முகவர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். சுற்றுலாப் பிரயாணிகளை அழைத்து வரும் செயற்திட்டம் தொடர்ந்து அவதானிக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் சுமார் 30 இலட்சம் பேர் ஈடுப்பட்டுள்ளார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சேவை கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எப்போது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எவராலும் குறிப்பிட முடியாது. ஆகவே எழுந்துள்ள சவால்களை சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் வெற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad