ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதியின் உரை பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இருக்கின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் அவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த சபாநாயகர் நடவக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்குமாறு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை இன்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். குறித்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களின் கருத்தை தெரிவிக்கும் பேச்சு சுதந்திரம் சட்ட ரீதியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு பேச்சு சுதந்திரத்தை சட்ட ரீதியில் வழங்கப்பட்டிருப்பது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் மக்களுக்காக அவர்களின் கருத்தை நாட்டுக்கு தெரிவிப்பதற்கு இருக்கும் உயர்ந்த நிறுவனம் பாராளுமன்றம் என்பதனாலாகும். 

என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துக்கு ஜனாதிபதி, ஹரீன் பெர்னாண்டோவின் பெயரை குறிப்பிட்டு அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு பாராளுமன்றத்துக்கு வெளியில் ஊடகங்களுக்கு முன்னால் பதிலளித்திருந்தை நாங்கள் கண்டோம். 

ஜனாதிபதியின் ஒட்டு மொத்த உரையையும் அவதானிக்கும்போது அங்கு பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக சென்று ஒரு வகையான அச்சுறுத்தும் வடிவத்தை காணமுடிகின்றது.

ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்துக்கு வந்து, பாராளுமன்ற அமர்வொன்றில் கலந்துகொள்வதற்கும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு பதிலளிப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரிந்த விடயம்.

ஜனாதிபதியின் உரை மற்றும் அதற்கு சமமாகவே அவரை பின் தொடர்பவர்கள் மற்றும் அரச ஊடகங்கள், சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதியின் பேச்சுக்கு நிகரான பேச்சுக்கள் இடம்பெறுவதை நாங்கள் காண்கின்றோம்.

இந்த நிலைமை பேச்சு சுதந்திரத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் பாரிய அழுத்தம் என்பதே எமது நம்பிக்கையாகும்.

எனவே அதியுயர் பாராளுமன்றத்தின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சி அனைத்து உறுப்பினர்களதும் பேச்சு சுதந்திரம் மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியுமான நபர் நீங்களாகும். 

அதனால் இந்த நிலைமையில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் அவர்களின் வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கும் உறுப்பினர்களின் உயிர் பாதுகாப்பு வழங்குவதற்கும் சபாநாயகர் என்றவகையில் நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad