ஏறாவூர் பிரதேசத்திற்குள் அலைந்து திரிந்த பிரதேச சபைத் தலைவரின் கட்டாக்காலிகளும் பிடிபட்டன - தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

ஏறாவூர் பிரதேசத்திற்குள் அலைந்து திரிந்த பிரதேச சபைத் தலைவரின் கட்டாக்காலிகளும் பிடிபட்டன - தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் அலையும் கட்டாக்காலிகளைப் பிடித்துக் கட்டி வைத்துத் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை பொதுமக்களினதும் பயணிகளினதும் வாகன ஓட்டுநர்களினதும் பெரு வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் பராமரிப்பின்றி அலைந்து திரியும் கட்டாக் காலிகள் ஏறாவூர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஏறாவூர் நகர சபையால் பிடிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையை ஊடறுத்துச் செல்லும் ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் நடமாட்டத்தால் அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்கின்றன.

அத்துடன் வாகனங்களும் பயணிகளும் நகர பிரதேசத்திலுள்ள மரக்கறிக் கடைக்காரர்களும் பூங்கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்டம் வளர்ப்போரும் இவ்வாறான கட்டாக்காலிகளின் தொல்லையால் இழப்புக்களைச் சந்தித்து வருவதாக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கட்டாக்காலிகளைப் பிடித்துக்கட்டி வைத்துத் தண்டப்பணம் அறவிடுவதென முடிவெடுக்கப்பட்டதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டாக்காலிகளைப் பிடித்துக்கட்டும் நடவடிக்கையில் முதல் நாளன்று 7 மாடுகளும் 2 கன்றுகளும் பிடிபட்டுள்ளன.

இவற்றில் பிரதேச சபைத் தலைவர் ஒருவரின் கட்டாக் காலிகளும் உள்ளடங்கும். தனது கட்டாக்காலி மாடுகள் பிடித்துக் கட்டப்பட்டிருந்த விடயத்தை அறிந்து கொண்ட பிரதேச சபைத் தலைவர் சத்தமில்லாமல் தண்டப்பணத்தைச் செலுத்தி மாடுகளை அப்புறப்படுத்திச் சென்றிருக்கின்றார்.

இந்த கட்டாக்காலிகளைப் பிடித்துக்கட்டும் தடாலடி நடவடிக்கையால் தற்போது ஏறாவூர் நகர பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் தொல்லை குறைந்திருப்பதாக வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் கட்டாக்காலியால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad