சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டு கண்டன போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டு கண்டன போராட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.

இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி வெள்ளிக்கிழமை இரவோடு, இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. 

வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இன்று காலை நடந்த இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இலங்கை தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment