தனியார் வகுப்புக்களை கண்காணிக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்க தீர்மானம் என்கிறார் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

தனியார் வகுப்புக்களை கண்காணிக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்க தீர்மானம் என்கிறார் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ்

(இராஜதுரை ஹஷான்)

தனியார் வகுப்புக்களை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரபூர்வமாக எடுக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தனியார் வகுப்புக்கள் குறித்து பல முறைப்பாடுகள் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 

எனினும் அவற்றை கண்காணிக்க கல்வி அமைச்சுக்கு அதிகாரம் கிடையாது. எவ்வாறிருப்பினும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் கல்வி முறைமை குறித்து முழுமையான பொறுப்பு கல்வி அமைச்சுக்கு உண்டு.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது இணைய வழியூடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனியார் வகுப்புக்களும் இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இதன்போது தனியார் வகுப்புக்களில் அதிக கட்டணம் முறையற்ற விதத்தில் அறவிடப்பட்டுள்ளன. 

கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு சில தனியார் வகுப்புக்களின் கற்றல் முறைமை சிறந்த முறைமையில் காணப்பட்டாலும் ஒரு சில தனியார் வகுப்புக்களின் கற்றல் நடவடிக்கைகள் இலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. 

ஒரு சிலர் முறையற்ற நோக்கங்களை தனியார் வகுப்புக்கள் ஊடாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே தனியார் வகுப்புக்களை கண்காணிக்க தேவையான அதிகாரங்களை கல்வி அமைச்சு பெற்றுக் கொள்ள அமைச்சரவையில் யோசனை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 50,000 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் வகுப்புக்களில் சுமார் 3 இலட்சத்துக்கு அதிகமானோர் ஆசிரியர்களாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். இவர்களின் கல்வி நிலைமை குறித்து இனி கண்காணிக்கப்படும். 

எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தனியார் வகுப்புக்களில் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படும். முறையற்ற வகையில் செயற்படும் தனியார் வகுப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment