அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு ஜனநாயகக் கட்சி கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு ஜனநாயகக் கட்சி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக மக்களவை சபாநாயகர் நேன்சி பெலோசியும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினரின் தலைவர் சக் ஷூமரும் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்ஸை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

துணை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய அந்தத் திருத்தம் வகைசெய்யும்.

துணை ஜனாதிபதி அதற்குச் சம்மதிக்காவிட்டால், ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டை முன்வைக்க முனைந்துள்ளனர் ஜனநாயகக் கட்சியினர். பாராளுமன்றக் கட்டடத்தில் அமெரிக்க நேரப்படி கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குழப்பத்துக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று அவர்கள் சாடினர்.

ட்ரம்பின் பதவிக் காலம் வரும் ஜனவரி 20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. அன்றைய தினத்தின் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

“இன்னும் 13 நாட்களே இருக்கின்றபோதும் அமெரிக்காவில் எந்த நாளேனும் ஆபத்தான நிலை ஏற்படலாம்” என்று ட்ரம்பின் எஞ்சிய பதவிக் காலம் குறித்து பெலோசி கூறினார். “ட்ரம்ப் மிக ஆபத்தான நபர்” என்று குறிப்பிட்ட அவைத்தலைவர் பெலோசி “இது மிகப் பெரிய அவசர நிலை” என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் அமைச்சரவை சகாக்கள் 25ஆவது திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கண்டனத் தீர்மானத்தின் கீழ் ட்ரம்பை தண்டிக்க வேண்டுமானால், அதற்கு செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதற்கு ஜனநாயக கட்சியினர் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றாக வேண்டும். தேவையான எண்ணிக்கையில் அப்படி குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது தோன்றவில்லை. அடம் கின்சிங்கர் என்பவரே 25ஆவது சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்ப் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முதல் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களான, மேரிலாந்து, வெர்மோன்ட் மாநில ஆளுநர்களும் ட்ரம்ப் பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். ட்ரம்பின் செயல்கள் இந்த திருத்தச் சட்டத்தை பயன்படுத்தப் பொருத்தமானவை என்று அவை நீதிக் குழுவில் ஜனநாயக கட்சியினர் கூறியுள்ளனர்.

ஆனால், செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை ஆகியவை ஜனவரி 20ஆம் திகதி பைடன் பதவி ஏற்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமானால், இந்த இரு அவைகளையும் மீண்டும் கூட்ட வேண்டும்.

சிறப்புத் தூதர் மிக் முல்வானே, ஒரு மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரி, ட்ரம்பின் மனைவி மெலனியாவின் (முதல் சீமாட்டி) பத்திரிகை தொடர்பு செயலாளர் ஆகியோர் பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பதவி விலகியுள்ளனர். ட்ரம்ப் பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று ட்விட்டரில் கூறிய வெளியுறவுத் துறை ஆலோசகர் ஒருவர் பதவி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad