கிழக்கு முனையம் விற்பனைக்கல்ல என பிரதமர் பகிரங்கமாக அறிவித்துள்ளார், எவராக இருந்தாலும் நீதிமன்றம் தண்டனை வழங்க பின்வாங்காது - உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

கிழக்கு முனையம் விற்பனைக்கல்ல என பிரதமர் பகிரங்கமாக அறிவித்துள்ளார், எவராக இருந்தாலும் நீதிமன்றம் தண்டனை வழங்க பின்வாங்காது - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. தேசிய வளங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும். சுபீட்சமான எதிர்கால கொள்கை அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டு நிறுவனங்களுக்கு விற்கவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ, தீர்மானிக்கப்படவில்லை. கிழக்கு முனையம் விற்பனைக்கு அல்ல என்ற தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கிழக்கு முனையம் குறித்து எதிர்த்தரப்பினர் போலியான கருத்துக்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தேசிய வளங்களை பாதுகாக்கும் கொள்கை சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் கொள்கைத் திட்டத்துக்கு முரணாக செயற்படாது.

சீனிக்கான வரி நீக்கத்தில் 10 பில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை எதிர்க்கட்சியினர் என்ற அடிப்படையில் ஊடகங்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்தினோம். ஊடக சந்திப்பினை மாத்திரம் நடத்தி விட்டு அமைதியாக நாங்கள் இருக்கவில்லை. பிணைமுறி மோசடி தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் உள்ளடக்கி முறைப்பாடு செய்தோம்.

சீனிக்கான வரி நீக்கத்தில் முறைகேடு இடம்பெற்றிருந்தால் எதிர்த்தரப்பினர் முறைப்பாடு செய்யலாம். குற்றச்சாட்டு குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது எவராக இருந்தாலும் தண்டனை வழங்க நீதிமன்றம் பின்வாங்காது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad