முதன் முறையாக புட்டினுடன் உரையாடினார் பைடன் - பேசிய விடயங்கள் என்ன? - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

முதன் முறையாக புட்டினுடன் உரையாடினார் பைடன் - பேசிய விடயங்கள் என்ன?

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதன் முறையாக உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிரக்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் கவலைகளை எழுப்பியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பைடனின் முன்முயற்சியில் நடந்த இந்த தொலைபேசி உரையாடலின் போது, இரு ஜனாதிபதிகளும் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில், பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான புதிய ஸ்டார்ட் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் நீட்டிப்பு தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மூலோபாய ஸ்திரத்தன்மை விவாதங்களை ஆராயவும் அவர்கள் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

உக்ரேனின் இறையாண்மைக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அது மாத்திரமன்றி 2020 அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு, மற்றும் அலெக்ஸி நவல்னியின் விவகாரம் உள்ளிட்ட பிற விடயங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன், புட்டினிடம் இதன்போது தெளிவுபடுத்தினார். 

முன்னோக்கி செல்லும் வெளிப்படையான மற்றும் நிலையான தகவல் தொடர்புகளை பராமரிக்க இரு ஜனாதிபதிகளும் இறுதியாக ஒப்புக் கொண்டதாகவும் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad