அமைச்சர் சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்கள் இன ஐக்கியத்தை சிதைக்கும் செயலாகவே உள்ளது - இரா.துரைரெத்தினம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

அமைச்சர் சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்கள் இன ஐக்கியத்தை சிதைக்கும் செயலாகவே உள்ளது - இரா.துரைரெத்தினம்

தமிழர்கள் விவகாரத்தில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு விரோதமாக இனவாதத்தை தூண்டுமளவிற்கு அமைச்சர் சரத் வீரசேகர கருத்து கூறுவது உகந்ததல்ல. இவரின் செயற்பாடானது இன ஐக்கியத்தை சிதைக்கும் செயலாகவே உள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் பேசுவதற்கான சிறப்புரிமை இருந்தாலும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் அனைத்து இன, மத, மொழி பேசுகின்ற அனைவரையும் ஒரு தாய்மக்கள் என்ற கொள்கைக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும். இது மாறாக ஒரு இனத்திற்கெதிராக பேசுவதென்பது மூவினத்திதிற்கான ஐக்கியத்தை உருவாக்க முடியாது.

அமைச்சர் சரத் வீரசேகரவின் அண்மையச் செயற்பாடானது இன ஐக்கியத்தை சிதைக்கும் செயலாகவே உள்ளது. தமிழர்களுக்கெதிராக தொடர்ச்சியாக கருத்து கூறும் இவ் அமைச்சரிடம் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளும், ஏனையவர்களும் சென்று தமிழர்களின் குறைபாடுகளை பேச முடியும்.

இலங்கை என்பது மூவின மக்களையும் உள்ளடக்கிய அம்மக்களின் சுதந்திரத்தை, உரிமைகளை, அதிகாரங்களை, ஜனநாயகத்தையும் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்துகின்ற கட்டமைப்பில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இருந்து கொண்டு தொடர்ச்சியாக இனவாதம் பேசுவதால் தமிழினம் இவ் அரசிடம் கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக இனக்கப்பாட்டுக்குச் செல்ல முடியாத துர்பாக்கிய நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும், கட்சித் தலைவர்களும் இவ் அமைச்சரிடம் தமிழர் தொடர்பான கருத்துக்களை பேசும் போது நிதானமாக பேசுமாறு அறிவுரை கூறுவது காலத்தின் தேவையாக உள்ளது.

தமிழர்களுக்கெதிராக இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், காணமல் போனோர் தொடர்பாக, 13ஆவது திருத்தச் சட்டம், வெளிநாட்டு விசாரணை தொடர்பாக, தொல்பொருள் ஆய்வு தொடர்பாகவும் மிகவும் காரசாரமான முறையில் கருத்துக் கூறுவதனால் எவ்வாறு இவ் அமைச்சரை சந்தித்து தமிழர்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். 

தமிழர்களையும் ஒரு இலங்கை பிரஜையாக பார்க்க வேண்டுமாயின் ஆரம்பித்துள்ள இப் புத்தாண்டிலாவது தமிழர்களையும் இணைத்துக் கொண்டு தமிழர்களின் உண்மையான நலன்கள் தொடர்பாக கருத்தைக் கூறுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment