ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்குவதை நிராகரிக்க போவதாக டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46வது ஜனாதிபதியாக வருகின்ற 20ம் திகதி பதவியேற்கிறார். 

ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்யும் இறுதி கட்ட நடவடிக்கையாக வருகின்ற 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, ஜோ பைடனுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும்.

இந்த நிலையில் 6ம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தின் போது ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்குவதை நிராகரிக்க போவதாக டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாண எம்.பி. டெட் குரூஸ் தலைமையில் 11 எம்.பி.க்கள் இந்த முடிவை அறிவித்துள்ளனர். 

மேலும் அவர்கள் தேர்தல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஏதுவாக வெற்றி சான்றிதழ் வழங்குவதை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

எனினும் பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஜோ பைடனின் வெற்றிக்கு ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதால் இவர்களின் முயற்சி பலன் அளிக்காது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad