ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போதும் நான்தான் தலைவர் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போதும் நான்தான் தலைவர் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போதும் தாமே தலைவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி உத்தியோகபூர்வமற்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலி முகத்திடல் முன்றலிலுள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவச் சிலைக்கருகில் நேற்றையதினம் முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 122 ஆவது நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமரர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று இரண்டு தடவை நடைபெற்றன. நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் தமது தந்தையாரின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அன்னாரின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் தாம் இரண்டு வருடங்களுக்கு முன் குறிப்பிட்டவை தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது எந்தவொரு முறையான பயணமும் கிடையாது. அதன் செயற்பாடுகள் சரியா? பிழையா? என்பதை என்னால் கூற முடியாது. கட்சியில் தற்போது சட்டவிரோதமாக ஒருவர் தலைவர் பதவியை வகிக்கின்றார்.

கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதை நான் ஒரு வருடத்துக்கு முன்பே எதிர்வு கூறி இருந்தேன். எவருடனும் சேர்ந்து நாம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை.

கட்சியை பலப்படுத்திக் கொண்டு தனியான பயணத்தில் முன்னோக்கி செல்வோமென நான் கூறியிருந்தேன். எனினும் அதன் பிரதிபலனை காண முடிகிறது என்றார்.

அதன் காரணமாகவே தாங்கள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டீர்களென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கட்சியிலிருந்து விலகவில்லை கட்சியில் நிரந்தரமாக இருப்பேன். இன்றும் நான்தான் அந்தக் கட்சியின் தலைவர். 

கட்சியின் ஆலோசகராகவும் உள்ளேன். அந்தக் கட்சியின் அரசியல் குழுவிலும் நான் இடம்பெற்றுள்ளேன். எனினும் எந்த ஒரு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுப்பதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad