இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் - News View

Breaking

Post Top Ad

Friday, January 1, 2021

இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில்

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை பலவந்தமாக எரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலங்கை அரசாங்கத்தின் பலவந்த எரிப்பு கொள்கையின் மூலம் 20 நாட்களேயான குழந்தை உட்பட 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் விசேட செயலணி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. 

கவுன்சிலின் உதவிச் செயலாளர் நாயகம் ஸாரா முஹம்மத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த விசேட செயலணியில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இலங்கை அமைப்புகள், சட்டத்தரணிகள், மருத்துவ நிபுணர்கள், சிரேஷ்ட சமூகத் தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை குறித்த செயலணி, ஏலவே இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அதில் தகனம் மட்டுமே என்ற கொள்கையை உடனடியாக மாற்றியமைக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதேவேளை லண்டனிலுள்ள முன்னணி சட்ட நிறுவனத்தின் அதிகாரி தயாப் அலி குறிப்பிடுகையில், இலங்கையில் சடலங்கள் எரிக்கப்படுவது சிறுபான்மையினரின் மத நம்பிக்கையையும் சர்வதேச சட்டங்களையும் கடுமையாக மீறும் செயலாகும். இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் முன் பிரேரணையாகவும் முன்வைக்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய முஸ்லிம் நிறுவனம் என்பதுடன் இதில் 500 க்கும் மேற்பட்ட அமைப்புகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad