உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், காரியாலயங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொரடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் கிராண்ட்பாஸ், தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு மற்றும் மாளிகாவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், அவிசாவளை, ருவன்வெல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நாடளாவிய ரீதியில் 50 கிராம சேவகர் பிரிவுகளும், சில வீதி ஒழுங்குகள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் காணப்படலாம். எனினும் அந்த பகுதிகளில் இன்னமும் வைரஸ் பரவலடைவதற்கு வாய்ப்புள்ளதன் காரணமாகவே அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

புதுவருடப் பிறப்பை அடுத்து நிறுவனங்கள், காரியாலயங்கள் மற்றும் சேவை நிலையங்கள் மீண்டும் வழமையை போன்று தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இவ்வாறு வழமைக்கு திரும்பியுள்ள நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தொழில் நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர். 

அதற்கமைய கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கும், நிறுவனங்களுக்கு வருகை தரும் நபர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கும், உடல் வெப்பநிலையை அளவிடுவதற்குமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உட்பட ஏழு சுகாதார வழிமுறைகளை இந்த தொழில் நிலையங்கள் பின்பற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காத தொழில் நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதும் கட்டாயமாகும். இதன்போது முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,098 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad