வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தைக் கொண்டு வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தைக் கொண்டு வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

(ஆர்.யசி)

கொவிட் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்து வர வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு பணியாளர்களை இந்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர எந்த தடையும் இல்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று நோய் காரணமாக பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு பணியாளர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சேகரித்துள்ள 14 பில்லியன் ரூபாய் பெறுமதியான அசையும் சொத்துக்களை பயன்படுத்தி மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் உள்ளனவா என்பது தொடர்பில் குழு விசாரணை செய்தது.

மத்திய கிழக்கில் எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்று நோய் காரணமாக தொழிலை இழந்த 34,721 பணியாளர்கள் தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாட்டை மீண்டும் திறப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வரும் நிலையிலும் தற்பொழுதும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ள வெளிநாட்டு பணியாளர்கள் குறித்து கண்டறிவதற்கு பணியகத்தினால் பொருத்தமான மாதிரியொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்ததுடன், இவ்வளவு பாரிய தொகையை செலவு செய்து பராமரிக்கப்படும் ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பதை கண்டறிய வேண்டுமென கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவித்தது.

இலங்கை பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காப்புறுதி முறைமையொன்று மற்றும் உரிய தரப்பினருடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளும் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்திய கோப் குழு, அந்த தேவையை பூர்த்தி செய்யும் புதிய காப்புறுதி முறைமையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என பரிந்துரைத்தது. 

இதன்போது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு பணியாளர்களை இந்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர எந்த தடையும் இல்லை என பணியகத்தின் தலைவர் இதன்போது வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment