மக்களின் பிரச்சினைகள் முதலில் தேசியமயப்படுத்தப்பட வேண்டும், அதில் வெற்றி பெறாத நிலையில் சர்வதேச மயமாக்குவதில் பலனில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

மக்களின் பிரச்சினைகள் முதலில் தேசியமயப்படுத்தப்பட வேண்டும், அதில் வெற்றி பெறாத நிலையில் சர்வதேச மயமாக்குவதில் பலனில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றி பெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்பதே நாம் கற்றறிந்த பாடங்களாக இருக்கின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினரால் நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் இதையேதான் வலியுறுத்தி இருக்கின்றார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது இலங்கையின் சொந்த ஆர்வத்தில் இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையே நாம் நீண்ட காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளோம். அதற்கான வாய்ப்புகள் இன்னும் அற்றுப் போய்விடவில்லை. அதனை தென் பகுதிக்கு நாம் ஒன்றிணைந்து உணர்த்த வேண்டும். அந்த உணர்த்தல் என்பது எமது செயற்பாடுகளிலேயே தங்கி இருக்கின்றது. தனித்தனியே பிரிந்து நின்று, வெறும் வெற்று வாய்ப் பேச்சுகளினால் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓர் இனத்தின் உணர்வுகளை இன்னோர் இனத்தவரிடம் எடுத்துரைக்கும்போது, அந்த இனத்தோரது உணர்வுகள் புண்படாமல் இருக்க வேண்டும்.

ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமாகத்தான் எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென ஒரு காலத்தில் ஆயுதமேந்தியப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அதனைக் கைவிட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்தோம். 

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் அந்தப் போராட்டம் எமது மக்களுக்கு அழிவையே தரும் என்பதை நாம் அப்போதே உணர்ந்திருந்தோம். அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது.

தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாம் பிரவேசித்த காலம் முதற்கொண்டு, இன்றுவரையில் தேசிய நல்லிணக்கம் நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பெயர்ப் பலகைகளை மாட்டிக் கொண்டு, விளம்பரப்படுத்திக் கொண்டு நாம் ஒரு போதும் செயற்பட்டதில்லை. இந்த எமது உழைப்பிற்கான பயன்கள் நிறையவே கிடைத்துள்ளன.

எம்மால் எதிர்ப்பு அரசியல் செய்யத் தெரியாமல் இல்லை. அதனால் எமது மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதாலேயே நாம் அதைத் தவிர்த்து வருகின்றோம்.

எமது மக்கள் தங்களது வாக்குகளால் எமக்களித்திருப்பது எமக்கான வேலை வாய்ப்புகளோ, எமக்கான வாழ்வாதாரங்களோ அல்ல, எமது மக்களது வேலை வாய்ப்புகளுக்கான, வாழ்வாதாரங்களுக்கான, அரசியல் உரிமைகளுக்கான அங்கீகாரமே என்பதை நாம் உணர வேண்டும். அந்த உணர்வே எம்மை இந்த இணக்க அரசியலில் நிலைத்து விட்டுள்ளது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், எமக்கு வாக்களித்த மக்களது என்றில்லாமல், எமது அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை நாம் எம்மால் இயன்ற வகையில் தீர்த்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad