குறைந்தபட்ச சம்பளமானது நாடாளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்பட வேண்டும் - வேலுகுமார் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

குறைந்தபட்ச சம்பளமானது நாடாளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்பட வேண்டும் - வேலுகுமார் எம்.பி.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், பாராளுமன்றத்தின் ஊடாக அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், குறைந்தபட்ச சம்பளமானது நாடாளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

'குறைந்தபட்ச வேதனங்கள்' (இந்திய தொழிலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (04) நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

வேலைக்கு ஆட்களை சேர்க்கும் வயதெல்லையை 15 இல் இருந்து 16 ஆக அதிகரிப்பதற்காகவே மேற்படி சட்டதிருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏற்பாட்டை வரவேற்றாலும் இச்சட்டம் நடைமுறைக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படாமை தவறாகும் என வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

14 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அரிசி மானியம் வழங்கப்படவேண்டும் என முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அரிசி மானியம் என்பது இல்லை. இதனை வழங்காத பட்சத்தில் 100 ரூபா தண்டப்பணம் என்பதும் உள்ளது. இவை தற்போதைய நிலைக்கேற்ப மாற்றப்படவில்லை. எனவே, முழுமையானதொரு திருத்தம் அவசியம் எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறைந்தபட்ச வேதனத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடு இருந்தும், நடவடிக்கைகள் யாவும் இதுவரை மூடிமறைக்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை நாடாளுமன்றமே இனி நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad