ஜனாதிபதி தனக்கு இரு பக்கங்கள் உள்ளதாகக் கூறியதற்கமையவே செயற்படுகிறார் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

ஜனாதிபதி தனக்கு இரு பக்கங்கள் உள்ளதாகக் கூறியதற்கமையவே செயற்படுகிறார் - ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனக்கு இரு பக்கங்கள் உள்ளதாகக் கூறியதற்கமையவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கவில்லை என்று மக்கள் மத்தியில் கூறிவிட்டு அதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இரு பக்கங்கள் உள்ளதாகக் கூறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கவில்லை என்று மக்கள் மத்தியில் கூறி விட்டு அதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். இதேபோன்று அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளையும் தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைத்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கடன்களை மீள செலுத்துவதில் எவ்வித சிக்கலுமில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அமைச்சரவை இணைப் பேச்சாளர் வழங்கிய கடனை மீள செலுத்த மீண்டும் கடன் வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறார். இலங்கைக்கு கடனை மீள செலுத்த முடியாது என்று அறிந்தும் யார் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள்? வெளிநாட்டு கடன் பெறப் போவதில்லை என்று கூறுபவர்கள் குறைந்தது 200 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்காக விளம்பரம் செய்துள்ளனர். இவ்வாறிருக்கையில் கடன் பெறப் போவதில்லை என்று கூறி யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் ?

கடந்த ஒரு வருடத்தில் அரிசியின் மொத்த விலை 37 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதற்கமைய அரிசியில் விலை தற்போது 137 ரூபாவாக உள்ளது. எனினும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 98 ரூபா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உரம் தொடர்பான விலையிலும் இவ்வாறே இடம்பெறுகிறது. ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு இவ்வாறுதான் செயற்படுத்தப்படுகிறதா ?

எமது ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு முயற்சித்தபோது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய அரசாங்கம் பாரிய எதிர்ப்புக்களை வெளியிட்டது. ஆனால் தற்போது அவர்கள் அதனையே செய்கின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு விடயத்தையும் வந்ததன் பின்னர் இன்னொரு விடயத்தையும் கூறுகின்றனர்.

நாட்டின் கொள்கையை மாற்றுவதற்கு உதய வீரதுங்க யார்? அவரது வணிக நடவடிக்கைகளுக்கு அலரி மாளிகையின் விலாசத்தை எவ்வாறு கூறலாம் ? உக்ரைன் முழுமையாக முடக்கப்பட்டுள்ள போது எதற்காக அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அழைக்கப்படுகிறார்கள் ? உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படும் சுற்றுலா பயணிகள் எவ்வித சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமலிருக்கும் காணொளி பதிவொன்றை பௌத்த பிக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே அரசாங்கம் இவ்வாறு மக்களை அசௌகரியத்திற்குள் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment