வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த ஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் உறவுகள் நினைவுகூர்வது தேசதுரோக குற்றமல்ல. இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது. தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட தூபி இடித்தழிக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கழைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுா் தூபி அழிக்கப்பட்டமை குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் இனவாத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையினால் தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும். சர்வதேச நாடுகளிலும் உரிமை போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் எழுந்து பிற்பட்ட காலத்தில் அவை போராட்ட இயக்கங்களாக மாற்றமடைந்தன. விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியையே கொண்டுள்ளது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு 1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கங்கள் பொறுப்பு கூற வேண்டும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நல்லிணக்கம் அனைத்து இன மக்கள் மத்தியிலும் செயற்படுத்தப்பட்டது. 2014 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இனவாதத்தை ஆயுதமாக கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களின் ஆதரவுடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டாலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்கு பின்னணியில் அரசியல்வாதிகளின் நோக்கங்கள் காணப்பட்டன. இனக் கலவரத்தை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படுத்தி பயனடைந்து கொண்டார்கள்.

தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. என்று குறிப்பிடுவது தவறாகும். தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் காலத்தில் ஒரு இனம் மாத்திரம்தான் வாக்களித்தது என்று குறிப்பிடப்படும்போது இனங்களுக்கிடையில் முரண்பாடு மீண்டும் தோற்றம் பெறும் தற்போது இந்நிலைமையே காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வது ஒன்றும் தேசதுரோக செயற்பாடல்ல. ஆகவே இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இரு வேறுபட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். தமிழ் - முஸ்லிம் மக்கள் தற்போது பல விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment