கட்டாய தகனத்துக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும் டுவிட்டரில் ஆதரவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

கட்டாய தகனத்துக்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும் டுவிட்டரில் ஆதரவு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

கட்டாயத் தகனம் தொடர்பான ஐ.நா அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களிடமிருந்து மிகத் தெளிவான செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலும், தத்தமது மத நம்பிக்கைகளின் பிரகாரமும் அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை 'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத் தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்' என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினொன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிக முக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களைக் கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

'தேசியவாதம், பாகுபாடு, ஆக்கிரமிப்புக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுச் சுகாதாரத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதை ஐ.நா அறிக்கை கண்டித்துள்ளது' என்றும் அதன் பதிவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad