சுங்கத் திணைக்களத்தினால் கடந்த வருடம் 650 பில்லியன் ரூபா வருமானம், இந்த ஆண்டில் 1,000 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

சுங்கத் திணைக்களத்தினால் கடந்த வருடம் 650 பில்லியன் ரூபா வருமானம், இந்த ஆண்டில் 1,000 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

(நா.தனுஜா)

சுங்கத் திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் சுமார் 650 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறமுடிந்ததாகக் தெரிவித்திருக்கும் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், அவ்வருமானத்தை 2021 ஆம் ஆண்டில் 1,000 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது அரசாங்கம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் மார்க்கங்களில் சுங்கத் திணைக்களம் மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிர்பாராத பாரிய செலவுகள் ஏற்பட்டன. அதுமாத்திரமன்றி வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாக அரச வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

2020 ஆம் ஆண்டு மிகவும் கடினமான காலப்பகுதியாகவே அமைந்திருந்தது. வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறைகள் வீழ்ச்சியடைந்ததுடன், மேலும் சில இடைநிறுத்தப்பட்டன. நாடுகளுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டமையின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டது. சர்வதேச கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இவையனைத்திற்கும் மத்தியிலும் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் விதமாகவே சுங்கத் திணைக்களம் செயற்பட்டது.

எனவே, அதன் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சுங்கத் திணைக்களத்தில் நவீன தொழில்நுட்பங்களை விஸ்தரிப்பதற்கான முதலீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி உரிய வழிமுறைகளின் ஊடாக மேலும் வருமானங்களை உள்ளீர்ப்பதற்கு சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கத் திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் சுமார் 650 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடிந்தது. இவ்வருடம் அதனூடாக சுமார் 1,000 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்கேற்றவாறான செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment