பொதுப் போக்கு வரத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

பொதுப் போக்கு வரத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா

(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுப் போக்கு வரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்பட்டதினால், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுப் போக்கு வரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது, வாகன சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் ஆயிரம் பேர் வரையில் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டதுடன், அவர்களுள் 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டிருந்தது.

பொதுப் போக்கு வரத்து சேவை தொடர்பில் நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இத்தகைய சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள மீன் மற்றும் மரக்கறி சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிரபலமான இடங்களில் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகள் தொடர்பிலும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment