சுகாதார விதிமுறைகளை பேணாமைக்காக கைது செய்யப்பட்ட 2,213 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் - பயணிகள் கட்டாயம் வாகன இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ளவும் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

சுகாதார விதிமுறைகளை பேணாமைக்காக கைது செய்யப்பட்ட 2,213 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் - பயணிகள் கட்டாயம் வாகன இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ளவும் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்ட நபர்களுள் 2,213 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை முதல் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் போது முகக் கவசம் அணியாத 2,025 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 24 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் 2361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,213 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்று மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டமைக்காக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். பொது போக்கு வரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பேரூந்தின் இலக்கத்தை பயணிகள் பார்வையிடுவதற்காக பேரூந்துக்குள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

பொதுப் போக்கு வரத்துக்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் அதன் இலக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் யாராவது அந்த பேரூந்துகளில் பயணித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டால், அதில் பயணித்த ஏனைய பயணிகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு இதனூடாக இலகுவாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad